மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடியுரிமையை ஒப்படைக்கும் போராட்டம்


மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடியுரிமையை ஒப்படைக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 9:01 PM GMT (Updated: 22 Feb 2021 9:01 PM GMT)

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடியுரிமையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் வாசலில் அமர்ந்து கோ‌‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடியுரிமையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் வாசலில் அமர்ந்து கோ‌‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒப்பந்த தொழிலாளர்கள் 
தஞ்சை மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அனைத்து இந்திய குடியுரிமை ஆவணங்களை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி மாநில பொதுச்செயலாளர் ராஜாராஜேந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் அருளானந்தய்யன், மாவட்ட தலைவர் ஜான்போஸ்கோ, தலைமை ஒருங்கிணைப்பாளர் மோகன், மாநில துணை செயலாளர் ஆரோக்கியம், செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் திரண்டனர்.
கோ‌‌ஷங்கள் எழுப்பினர் 
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் விடுதலைதமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தஞ்சை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகம் ஆகியோரும் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடியுரிமை ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்துச்சென்று கொடுத்தனர். ஆனால் கலெக்டர் கோவிந்தராவ், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். குடியுரிமை ஆவணங்களையும் எடுத்துச்செல்லுமாறு கூறினார். இதையடுத்து அவர்கள் அவற்றை எடுத்துக்கொண்டு கலைந்துசென்றனர்.
பணி நிரந்தரம் 
இது குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் இயற்கை பேரிடர் காலங்களான தானே, வர்தா, ஒக்கி, கஜா, நிவர் போன்ற புயல் காலங்களில் சிறப்பாக பணியாற்றினோம். இதையடுத்து மின்துறை அமைச்சர் எங்களை பாராட்டினர். மேலும் முதல்-அமைச்சர் தலைமையில் பாராட்டு விழா நடத்தி எங்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்கி, பணி நிரந்தரம் செய்தாக வாக்குறுதி அளித்தார்.
தமிழக முதல்-அமைச்சரிடமும் எங்கள் கோரிக்கையை கொடுத்தோம். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் மனம் உடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தமிழகத்தில் வாழவே தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். எனவே எங்களின் இந்திய குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஊருக்கே விளக்கேற்றிய எங்கள் வாழ்க்கையில் இந்த மின்சார வாரியமும், தமிழக அரசும் ஒளியேற்றாமல் இருளில் மூழ்கடித்துள்ளது என்றனர்.

Next Story