குடியுரிமை சான்றுகளை ஒப்படைக்க முயன்ற மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்
பணி நிரந்தரம் கோரி குடியுரிமை சான்றுகளை மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலக்தில் ஒப்படைக்க முயன்றனர்.
புதுக்கோட்டை
ஆர்ப்பாட்டம்
ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்பட குடியுரிமை சான்றுகளை திரும்ப புதுக்கோட்டை கலெக்டர் அலுலவகத்தில் ஒப்படைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தலைவர் சுந்தரவடிவேலு தலைமையில் மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், நிர்வாகிகள் நேற்று காலை புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் தங்களது குடியுரிமை சான்றுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டிருந்த நிலையில், குடியுரிமை சான்று அட்டைகளை ஒப்படைக்க வேண்டாம் எனவும், கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தனர்.
அந்த மனுவில், மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிற நிலையில் தங்களுக்கு ரூ.380 ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்யப்படும் என அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. குறைந்தபட்ச ஊதியம் கூட கொடுக்க மறுக்கின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
பொதுமக்கள் மனு
இதேபோல மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். வாராப்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பட்டா கோரி மனு அளித்தனர்.
Related Tags :
Next Story