ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக சுற்றுப்பயணம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மு.க.ஸ்டாலின்


ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக சுற்றுப்பயணம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Feb 2021 9:28 PM GMT (Updated: 22 Feb 2021 9:28 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக சுற்றுப்பயணம் செய்த மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக சுற்றுப்பயணம் செய்த மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்தது. 2-வது நாளான நேற்று பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் தொகுதிகளுக்கான நிகழ்ச்சி அந்தியூர் தொகுதிக்கு உள்பட்ட பங்களாப்புதூர் புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்தில் நடந்தது. 4 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு கோரிக்கை மனுக்களுடன் குவிந்தனர்.
பல ஆயிரக்கணக்கானவர்கள் கூடி இருந்த இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சி அரங்கு முழுவதும் நடந்து சென்ற மு.க.ஸ்டாலின் அவரை பார்க்க திரண்டிருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்- இளம்பெண்களுடன் அவர் நலம் விசாரித்து கைகளை தொட்டு உற்சாக மூட்டினார். 15 நிமிடங்களுக்கும் மேலாக அவர் மக்களுடன் செலவிட்டார். அப்போது அனைத்து தரப்பினரும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பாராட்டு
அவர் சிறு குழந்தைகளை பார்த்ததால் அருகில் சென்று நலம் விசாரித்தார். அப்போது டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த மயில்சாமி-சவுந்தர்யா தம்பதி அவர்களின் 2 வயது குழந்தை அனுகீர்த்தனாவுடன் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை பார்க்க ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்தனர். குழந்தை கருப்பு- சிவப்பு உடையில் மு.க.ஸ்டாலினை பார்த்து கை அசைத்ததை அவர் பார்த்தார். உடனடியாக அருகில் சென்று குழந்தையை கையில் எடுத்து முத்தமிட்டு கொஞ்சினார். குழந்தையும் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து 2 புதுமண தம்பதிகளுக்கு மலர் மாலை வழங்கி வாழ்த்தினார்.
மேலும் ஈரோடு வடக்கு மாவட்ட பகுதியை சேர்ந்த பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியின் போது பெறப்பட்ட மனுக்கள் ஒரு பெட்டியில் சேகரிக்கப்பட்டது. அதில் இருந்து சில கோரிக்கை மனுக்களை எடுத்து அதை எழுதியவர்களை மு.க.ஸ்டாலின் பேச வைத்தார். உடனுக்குடன் அவர்களுக்கு பதில் அளித்தார்.
ஒப்புகை சீட்டு
பின்னர் அனைத்து கோரிக்கை மனுக்களையும் பெட்டியில் போட்டு பூட்டு போட்டார். சாவியை அவரது சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். பெட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த பெட்டி அண்ணா அறிவாலயம் கொண்டு செல்லப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த அடுத்தநாள் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படும்.        அந்த குழுவினர் 100 நாட்களில் மனுக்கள் மீது காணப்பட்ட தீர்வு குறித்து கூற வேண்டும். 100 நாட்களில் நீங்கள் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் கோட்டையில் நுழைந்து, முதல்- அமைச்சரின் அறைக்கே வந்து கேள்வி கேட்கலாம்.

Next Story