தென்காசியில் குறை தீர்க்கும் கூட்டம்: சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


தென்காசியில் குறை தீர்க்கும் கூட்டம்: சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 22 Feb 2021 9:34 PM GMT (Updated: 22 Feb 2021 9:34 PM GMT)

ஆலங்குளம் அருகே கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

தென்காசி:

ஆலங்குளம் அருகே கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். அப்போது, ஆலங்குளம் அருகே சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

அந்த மனுவில், ‘தங்களது கிராமத்தின் அருகில் உள்ள தீத்தாரப்பபுரம் பகுதியில் கல்குவாரி, கிரஷர் செயல்படுகிறது. அங்கிருந்து இரவு பகலாக கனரக வாகனங்கள் செல்வதால் தங்களது கிராமத்தில் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.

சாலை விரிவாக்கம்

சமத்துவ மக்கள் கழக செயலாளர் லூர்து நாடார் வழங்கிய மனுவில், ‘தென்காசி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து குத்துக்கல்வலசை வரையிலும் சாலையின் இருபுறமும் அகலப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், ‘மின்வாரியத்தில் உற்பத்தி மற்றும் பகிர்மான பிரிவுகளில் கடந்த 15 ஆண்டுகளாக 8,400 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

நெல் கொள்முதல் 

பா.ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணை தலைவர் சங்கர சுப்பிரமணியன் வழங்கிய மனுவில், ‘தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து ஏக்கருக்கு 80 மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச்செயலாளர் முத்து வைரவன் வழங்கிய மனுவில், ‘எங்களது சமுதாயத்தை இழிவுடுத்தி பேசியவரை கண்டித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட எங்கள் இயக்க நிறுவன தலைவர் இசக்கிராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, உதவி கலெக்டர் ராமச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story