தமிழக, கர்நாடக மாநில அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது


தமிழக, கர்நாடக மாநில அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
x
தினத்தந்தி 23 Feb 2021 5:25 AM IST (Updated: 23 Feb 2021 5:25 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக, கர்நாடக மாநில அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்
சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி தமிழக - கர்நாடக ஆகிய 2 மாநிலங்களிடையே சட்டம்-ஒழுங்கு மற்றும் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த இரு மாநில அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழக-கர்நாடக எல்லையோர சோதனைச்சாவடிகளை பலப்படுத்துவது மற்றும் கூடுதலாக தேவைப்படும் இடங்களில் புதிதாக சோதனை சாவடிகள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

சோதனைச்சாவடியை பலப்படுத்துவது
சேலம் மாவட்டத்தில் தமிழக - கர்நாடக எல்லையோர பகுதியில் உள்ள காவேரிபுரம் சோதனைச்சாவடியை பலப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், மதுபானங்கள் அனுமதியின்றி கொண்டு செல்வதை தடுக்க இந்த சோதனைச் சாவடிகளில் உள்ள போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பதின் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.தேர்தல் நடைபெறும் போது அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தொடர் குற்றவாளிகளை கண்காணிக்கவும், தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயங்களை பதுக்கி வைத்து தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்கவும், ஏற்கனவே உள்ள சோதனை சாவடியை பலப்படுத்தியும், கூடுதலாக சோதனைச்சாவடிகள் அமைப்பது குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கொள்ளேகால் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ், சேலம் முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) ராஜ்குமார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், சேலம் உதவி ஆணையர் (கலால்) தனலிங்கம், சேலம் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) அம்பாயிரநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story