நங்கவள்ளி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தாய்-மகள் பரிதாப சாவு


நங்கவள்ளி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தாய்-மகள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 23 Feb 2021 12:10 AM GMT (Updated: 23 Feb 2021 12:10 AM GMT)

நங்கவள்ளி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகள் பரிதாபமாக பலியானார்கள்.

 மகன் படுகாயத்துடன் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்
சேலம் சிவதாபுரம் பெருமாம்பட்டி தும்பா துளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம், நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி (வயது 39). மகள் டோனிகா (19), மகன் குல்தீப் கமலேஷ் (18). இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்தனர். 

நேற்று மேட்டூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த விழாவிற்கு பூங்கொடி, தனது மகன், மகளுடன் சென்றார். அவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை குல்தீப் கமலேஷ் ஓட்டிச்சென்றார். 

பின்னர் விழா முடிந்து மேட்டூரில் இருந்து சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் பிற்பகலில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். நங்கவள்ளி-மேட்டூர் சாலையில் வீரக்கல் கோழிப்பண்ணை மேடு அருகே மோட்டார் சைக்கிள் வந்தது.
அப்போது நங்கவள்ளியில் இருந்து மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய பதிவு எண் பெறுவதற்காக கார் ஒன்று சென்றது. அந்த கார் எதிர்பாராதவிதமாக குல்தீப் கமலேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் பலி
இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பூங்கொடியும், அவருடைய மகள் டோனிகாவும் இறந்து விட்டனர். அதே நேரத்தில் பலத்த காயத்துடன் குல்தீப் கமலேஷ் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விபத்து குறித்து நங்கவள்ளி போலீசில் பூங்கொடியின் கணவர் செல்வம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடததி வருகிறார்கள். மேலும் விபத்தில் இறந்த தாய்- மகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் தாய்-மகள் இறந்த சம்பவம் சிவதாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story