மேட்டுப்பாளையம் யானைகள் முகாமில் பொதுமக்களுக்கு திடீர் தடை
மேட்டுப்பாளையம் யானைகள் முகாமில் பொதுமக்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யானை மீது கொடூர தாக்குதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோவில் யானை ஜெயமால்யதாவை பாகன் ராஜா என்கிற வினில்குமார், உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் கடந்த 20-ந் தேதி மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக அடித்து துன்புறுத்தினர்.
இதுகுறித்து வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. முகாம் பணியாளர்கள் தவிர பத்திரிகையாளர்கள் உட்பட வெளி நபர்களை அனுமதிக்க மறுத்து அறநிலையத்துறை சார்பில் திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே முகாமில் பாகன் வினில்குமார், உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் இல்லாததாலும் நன்கு பழக்கப்பட்ட அவர்களது குரலைக் கேட்காததாலும் யானை ஜெயமால்யதா மிகவும் சோகத்துடன் காணப்பட்டது. பாகன்கள் தங்கியிருந்த, கொட்டகையை அசைந்து அசைந்து அங்குமிங்கும் தேடிக்கொண்டிருந்தது.
பாகன் வழங்கும் சாதம் மற்றும் பசுந்தீவனங்களை முன்பு போல் விரும்பி உண்ணாமல் குறைந்த அளவில் உட்கொண்டு பாகன் தன்னை விட்டுப் பிரிந்த சோகத்தை சொல்லாமல் சொல்லியது.
அவசர ஆலோசனைக் கூட்டம்
இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன் தலைமையில் பாகன்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம், முகாம் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் அறநிலையத் துறை இணை ஆணையர் யானை ஜெயமால்யதாவை பராமரிப்பது குறித்து கேட்டபோது யானைக்கு வெல்லம், சாதம், பசுந்தீவனங்களை வழங்கி மெல்ல மெல்ல இரண்டு நாட்களில் தங்களது கட்டளைக்கு கீழ்படிய வைத்து கட்டி வைக்கப்பட்டுள்ள யானையை அவிழ்த்து விடுவோம் என்று மற்ற பாகன்கள் உறுதியளித்தனர் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாகன்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள கொட்டகைகளுக்குள் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வந்து கொண்டிருந்தது. எனவே இதை உடனடியாக சரிசெய்ய இணை ஆணையர் செந்தில்வேலன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அரசு வன கால்நடை மருத்துவர்கள் சுகுமார் கலைவாணன், ராஜேஷ், ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா ஆகியோர் முன்னிலையில் யானை ஜெயமால்யதாவின் கால்களில் ஏதாவது காயங்கள் ஏற்பட்டு உள்ளதா என்பதை பார்வையிட்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story