கோவையில் போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் 640 பேர் கைது
கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் 640 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி நேற்று காலை அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன் குவிந்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இந்த நிலையில் அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், பல ஆண்டுகளாக எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறோம்.
அமைச்சருடன் 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையையும் அரசு அமல்படுத்தாமல் உள்ளது. எனவே எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் செயலாளர் ஸ்டெல்லா, பொருளாளர் அலமேலுமங்கை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 640 அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story