தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது


தூத்துக்குடி  விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 23 Feb 2021 4:57 PM IST (Updated: 23 Feb 2021 4:57 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
கருத்து கேட்பு கூட்டம்
தூத்துக்குடி விமான நிலையம் ஓடுபாதை விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குமாரகிரி, சேர்வைக்காரன்மடம், முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளில் விமான நிலையம் விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலைய ஓடுபாதை நீளம் 1350 மீட்டரில் இருந்து 3 ஆயிரத்து 115 மீட்டராகவும், அகலம் 30 மீட்டரில் இருந்து 45 மீட்டராகவும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 10 ஆயிரத்து 800 சதுரமீட்டர் அளவில் உள்நாட்டு முனையம் 600 பயணிகள் கையாளும் திறனுடன் அமைக்கப்பட உள்ளது. வாகன நிறுத்துமிடம் மற்றும் முழுமையான சுற்றுச்சுவருடன் 6 கண்காணிப்பு கோபுரம் அமைப்பது குறித்தும் விளக்கி கூறினார். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
கருத்துக்கள்
தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளம் பெருகிய மாவட்டம் ஆகும். இங்கு உள்ள விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகளால், பயண வசதி மற்றும் தொழில் வளம் பெருகும். விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக மக்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக விமான நிலைய வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேற்றுவதில் கவனம் செலுத்தப்படும். விமான நிலையத்துக்கு தேவையான நீர் தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் கவனம் செலுத்தப்படும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழலை கண்காணிப்பதை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளையும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விமான நிலைய வளாகத்துக்கு அருகில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகள் தெளிவுப்படுத்த வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்துக்கு எடுக்கப்பட்ட நிலம் குறித்த சர்வே நம்பர் மற்றும் சப் டிவிசன் விவரங்களும் முழுமையாக தெரிவிக்கப்படும். தாலுகா அலுவலகத்தில் தகவல் பலகையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிமையாளர்களுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் அருகில் உள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியேற்ற விமான நிலைய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களின் கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதனை கருத்தில் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் விமான நிலைய அலுவலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story