கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நாளை குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நாளை குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 1:39 PM GMT (Updated: 23 Feb 2021 1:58 PM GMT)

சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாவட்ட தலைநகரங்களில் 25-ந் தேதி (வியாழக்கிழமை) குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் தெரிவித்தார்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன குழு கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் பி.ராமு தலைமை தாங்கினார். 

வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் என்.காசிநாதன்,  பொதுச் செயலாளர் வி.பழனி, பொருளாளர் என்.வேல்முருகன், துணைச்செயலாளர் கே.கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், மாநில பொருளாளர் ஜி.சதீஷ் உள்பட தமிழகத்தின் 36 மாவட்டங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து  மாநில பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 25-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

எதிர்ப்பு பிரசாரம் 

அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் தொகுதியிலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் பி.தங்கமணி போட்டியிடும் தொகுதியிலும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் அவர்களுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்றார். 

Next Story