மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் + "||" + Anganwadi workers struggle

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம், 

அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 2,941 அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள், உதவியாளர்கள் என 4,500 பேர், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

மேலும் இவர்கள் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலுக்கு திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் நடந்த இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட தலைவர் முத்துக்குமரன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பிரேமா, பொருளாளர் ராமதிலகம், துணைத்தலைவர் பழனியம்மாள், நிர்வாகிகள் கோவிந்தம்மாள், சரோஜா, சிவகாமி, கலைச்செல்வி, கவுசல்யா உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பல்வேறு பணிகள் பாதிப்பு

இந்த போராட்டம் காரணமாக விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிதல், கர்ப்பிணி பெண்களுக்கு காய்கறிகள் வழங்கும் பணி, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்காணித்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருதல், ரத்தசோகை உள்ள கர்ப்பிணி பெண்களை கவனித்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறுகையில், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றனர்.