கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 559 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 559 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2021 9:34 PM IST (Updated: 23 Feb 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி, கூடலூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 559 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று 2-வது நாளாக ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. 

போராட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் சசிகலா தலைமை தாங்கினார் போராட்டத்தில் அகவிலைப்படி உடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

அங்கன்வாடி பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுப்புகள் வைத்து பலத்த பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது ஊழியர்கள் நாங்கள் கலெக்டர் அலுவலக உள் வளாகத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். 

இல்லை என்றால் சாலையில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 365 பேரை கைது செய்து பஸ்களில் ஏற்றி சிறுவர் மன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

கூடலூர்

கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவர் விஜயா தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் மணி, குஞ்சு முகமது உள்பட பலர் பேசினர். 

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களை போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஜெயசிங், அகமது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கன்வாடி ஊழியர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 194 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

இதேபோல சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000, குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டி ஏ.டி.சி.யில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயா தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பணிக்கொடை தொகையை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையலர், 

சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட புதிய நியமன தேர்வை உடனே நடத்தி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 8 ஆண்கள் உள்பட 161 பேரை கைது செய்தனர்.

Next Story