பொக்காபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.
கூடலூர்,
கூடலூர் அருகே பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்ச்சையாக நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதேபோல் கோவிலை சுற்றி கடைகள் வைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை பொருட்களை கொண்டு வரக்கூடாது என அதிகாரிகள் தடை விதித்தனர்.
கரக மற்றும் திருத்தேர் ஊர்வலத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து குறைவான பக்தர்களுடன் கோவிலை சுற்றி கரக ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
சிம்ம வாகனத்தில் வீதி உலா
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகன பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
அப்போது பக்தி கோஷமிட்டவாறு பல்லக்கை பக்தர்கள் சுமந்து சென்றனர். பின்னர் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று நிறைவு விழா நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு அம்மன்குடி விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்ற நிலையில் நடப்பாண்டில் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நிறைவுபெற்றது.
Related Tags :
Next Story