தூத்துக்குடி பகுதியில் சரக்கு பெட்டக வாடகை உயர்வால் ஏற்றுமதியாளர்கள் தவிப்பு
சரக்கு பெட்டகங்களின் வாடகை உயர்ந்து இருப்பதால், தூத்துக்குடி பகுதி ஏற்றுமதியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
தூத்துக்குடி:
சரக்கு பெட்டகங்களின் வாடகை உயர்ந்து இருப்பதால், தூத்துக்குடி பகுதி ஏற்றுமதியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
ஏற்றுமதி
கடல் வாணிபம் அந்நிய செலாவணியை ஈர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு ஆயத்த ஆடைகள், கோவையில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கார்களுக்கு பொருத்தப்படும் செயின், கரூர் விரிப்புகள், கேரளாவில் இருந்து பதப்படுத்தப்பட்ட முந்திரி பருப்புகள், தேங்காய் நார் விரிப்புகள், கடல் உணவுகள் என பல்வேறு பொருட்கள் சரக்கு பெட்டகங்களில் அடைத்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, ரஷ்யா, சீனா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
சரக்கு பெட்டகம்
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சரக்கு போக்குவரத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து கடந்த ஆண்டை விட சற்று குறைந்தே காணப்பட்டது. கொரோனா காலங்களில் இந்தியாவில் துறைமுக பணிகள் நிறுத்தப்படவில்லை என்றாலும் இறக்குமதி செய்யப்பட்ட தளவாட பொருட்களை கொண்டு செல்வதில் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டதால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு பெட்டகங்கள் அதிகமாக தேங்கின. இதனால் சரக்கு பெட்டக நிறுவனங்கள் வேறு நாடுகளை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய துறைமுகங்களில் சரக்கு பெட்டகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
தற்போது தொழிற்சாலைகள் முழுவீச்சில் உற்பத்தி செய்து வருகின்றன. ஆனால் அந்த சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான சரக்கு பெட்டகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் சரக்கு பெட்டகங்களின் வாடகை அதிகரித்து உள்ளது.
அவதி
இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் கூறும் போது, கொரோனாவுக்கு பிறகு தொழிற்சாலைகள் அதிக அளவில் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான சரக்கு பெட்டகங்களுக்கு சமீபகாலமாக தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் சரக்கு பெட்டகங்களுக்கான வாடகை அதிகரித்து இருக்கிறது. சரக்கு பெட்டக நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்டகத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் 1800 அமெரிக்க டாலர்கள் வாடகை பெற்று வந்த நிலையில் ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை வாடகையை உயர்த்தி 5 ஆயிரம் டாலர் வரை வாடகை பெறுகின்றனர். அதே போன்று பல நாடுகளுக்கு செல்லும் சரக்கு பெட்டகங்களுக்கும் வாடகை அதிகரித்து உள்ளது. இலங்கைக்கு சுமார் 500 முதல் 600 டாலர்கள் வரை வாடகை உயர்த்தப்பட்டு உள்ளது.
கடந்த காலங்களில் சரக்கு பெட்டக கப்பல் வரும் போது சுமார் 300 முதல் 400 வரை காலி சரக்கு பெட்டகங்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும். ஆனால் தற்போது அதிகபட்சமாக 50 சரக்கு பெட்டகங்கள் மட்டுமே வருகிறது. இதனால் சரக்கு ஏற்றுமதிக்காக சரக்கு பெட்டகங்களை பதிவு செய்த நிறுவனங்கள், சரக்கு பெட்டகங்களை பெறுவதற்காக காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இறக்குமதி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை பெறுவதற்காகவும் நிறுவனங்கள் டோக்கன் பெற்று காத்து இருக்கின்றனர். பலருக்கு சரக்கு பெட்டகங்கள் கிடைப்பது இல்லை. இதனால் தூத்துக்குடி பகுதி ஏற்றுமதியாளர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர் என்று கூறினார்.
Related Tags :
Next Story