மசினகுடி-ஊட்டி சாலையில் ஸ்கூட்டரில் வந்த இளம்பெண்ணை காட்டு யானை வழிமறித்ததால் பரபரப்பு
மசினகுடி ஊட்டி சாலையில் ஸ்கூட்டரில் வந்த இளம்பெண்ணை காட்டு யானை வழிமறித்தது. அப்போது அவர் ஸ்கூட்டரை போட்டுவிட்டு ஓடியதால் உயிர் தப்பினார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சி உள்ளது. வனப்பகுதியையொட்டி இந்த பகுதி உள்ளதால் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.
இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் சீகூர் பாலம் பகுதியில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை நடுவில் நின்று இருந்த காட்டு யானை மெதுவாக சாலையை கடக்க முயன்றது.
இந்த சமயத்தில் ஊட்டியில் இருந்து மசினகுடி நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இதனால் காட்டு யானை காரை நோக்கி நடந்தவாறு வந்தது. அப்போது காருக்கு பின்னால் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தார்.
இளம்பெண்ணை வழிமறித்தது
அப்போது ஸ்கூட்டரில் வந்த பெண்ணை காட்டு யானை திடீரென வழிமறித்து விரட்ட தொடங்கியது. இதனால் பயந்துபோன அந்த பெண் மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு விட்டு வந்த வழியாக தப்பி ஓடினார். தொடர்ந்து வந்த காட்டு யானை சாலையில் கிடந்த மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து சேதப்படுத்தியது. மேலும் துதிக்கையால் மோட்டார் சைக்கிளை தூக்கி வீசியது.
இதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் கூச்சலிட்டு சத்தம் போட்டனர். தொடர்ந்து காட்டு யானையும் அங்கிருந்து சென்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ வைரல்
தொடர்ந்து அந்தப் பெண் சேதமடைந்த மோட்டார் சைக்கிளை பொதுமக்களின் உதவியுடன் அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தொந்தரவு செய்யக்கூடாது
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கோடைக்காலம் தொடங்க உள்ளதால் கூடலூர், முதுமலை, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும்.
மேலும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் நின்றிருந்தால் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. அவ்வாறு தொந்தரவு செய்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்களை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story