மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாகவும் அதிகபட்சம் ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும்.
தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அலுவலகங்களில் குடியேறுதல் மற்றும் சாலை மறியல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று 2-வது கட்டமாக மாநிலம் முழுவதும் மீண்டும் குடியேறும் போராட்டத்தை தொடங்கினர்.
இதையொட்டி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் நேற்று திரண்டு வந்தனர்.
பின்னர் அங்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.
அப்போது உதவித்தொகை உயர்வு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கோஷமிட்டனர். இதையடுத்து அனைவரும் அங்கேயே அமர்ந்து போராட்டத்தை நடத்தினர்.
இதனால் போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டது.
இதற்காக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் சமையல் செய்து, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. உணவை சாப்பிட்டு விட்டு தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story