மாவட்ட செய்திகள்

கேசவபுரத்தில் எருது விடும் விழா + "||" + Bull race Festival at Kesavapuram

கேசவபுரத்தில் எருது விடும் விழா

கேசவபுரத்தில் எருது விடும் விழா
கேசவபுரத்தில் எருது விடும் விழா நடந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்கம்பாறை

கேசவபுரத்தில் எருது விடும் விழா நடந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

எருது விடும் விழா

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அருகே கேசவபுரம் கிராமத்தில் எருது விடும் விழா இன்று நடந்தது. இதனையொட்டி மாடு விடும் வீதியின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதுடன், சாலை முழுவதும் மண் கொட்டப்பட்டிருந்தது. 

விழா நடக்கும் இடத்தில் கால்நடை பராமரிப்பு துறையினர், கால்நடை மருத்துவர்கள், மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர். வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

தாசில்தார்கள் ரமேஷ், சரவணமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். கணியம்பாடி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராகவன், பென்னாத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் அருள்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ரமேஷ் வரவேற்றார். 

இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 170 காளைகள் கலந்து கொண்டன. விழாவில் பங்கேற்ற காளை உரிமையாளர்கள், தங்களது மாடுகளின் கொம்புகளில் பூக்கள் மற்றும் துணிகளை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தார். 

காலை 10 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, எருது விடும் விழா தொடங்கியதும் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. 

லேசான தடியடி

சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர். மதியம் 2 மணிக்கு மேல் விழா தொடர்ந்து நடைபெற்றதால், விழாவுக்கு அனுமதி இல்லை எனக் கூறி அதிகாரிகள் விழாவை முடித்துக் கொண்டனர். 

அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.7,777 உள்பட 65 பரிசுகள் வழங்கப்பட்டது. 

மாடுகள் முட்டியதில் 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் உடனடி சிகிச்சை அளித்தனர்.