அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 582 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் துறை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்தி அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், அரசுத்துறையில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 9, 10-ந் தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர். இருப்பினும் இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் மாற்றுத்திறனாளிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டதோடு குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.
விழுப்புரம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடந்த இப்போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயக்குமார், டில்லிபாஷா, செல்வி, குணசேகரன், சரவணன், கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் முருகன், சேகர், குறளரசன், மும்மூர்த்தி, ராஜேந்திரன், ஞானவேல் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தினுள் குடியேறுவதற்காக சென்றனர். உடனே அவர்களை விழுப்புரம் தாலுகா போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 106 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
582 பேர் கைது
இதேபோல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குடியேறும் போராட்டம் நடத்திய 74 பெண்கள் உள்பட 137 பேரும், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பெண்கள் உள்பட 98 பேரும், திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட துணைத்தலைவர் பாவாடைராயன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்பட 75 பேரும், திருச்சிற்றம்பலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பெண்கள் உள்பட 90 பேரும், மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 41 பேரும், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட துணைத்தலைவர் மகாலிங்கம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 35 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 582 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story