கட்டளை மேட்டு வாய்க்காலில் கட்டப்பட்ட குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டளை மேட்டு வாய்க்காலில் கட்டப்பட்ட குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை
குறுகிய பாலம்
கரூர் மாவட்டம் குளித்தலை - மணப்பாறை சாலையில் குளித்தலை அருகே உள்ள வை.புதூர் செல்லும் வழியில் கட்டளை மேடு, புதிய கட்டளைமேடு என்கிற இரண்டு வாய்க்கால்கள் அருகருகே செல்கின்றன. இதில் கட்டளை மேட்டு வாய்க்கால் மேல் உள்ள பாலம் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. ஆனால் புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் 1956 -ல் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டு பாலம் கட்டப்பட்டது.
இந்த இரு வாய்க்கால் பாலங்களும் குறுகிய அகலத்திலேயே கட்டப்பட்டிருந்தது. பின்னர் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் மேல் கட்டப்பட்ட பாலம் மட்டும் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தி கட்டப்பட்டது. கட்டளை மேட்டு வாய்க்காலில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பாலம் தற்போது வரை குறுகலான பாலமாகவே உள்ளது. இந்த குறுகலான பாலத்தில் ஒரே சமயத்தில் ஒரே ஒரு கனரக வாகனம் மட்டுமே பயணிக்க முடியும்.
பொதுமக்கள் கோரிக்கை
கனரக வாகனங்கள் வரும்போது இந்த பாலத்தில் மோட்டார் சைக்கிளில் கூட யாரும் செல்ல முடியாது. மேலும் இந்த பாலத்தின் இருபுறமும் உயரமான தடுப்புகள் இல்லாத காரணத்தினால் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்லும்போது தவறி வாய்க்காலில் விழுந்துவிடும் ஆபத்தான நிலை உள்ளது. போதுமான அகலம் இல்லாத காரணத்தினால் அடிக்கடி இந்த பாலத்தில் செல்லும் வாகனங்கள் சிறுசிறு விபத்துகளுக்கு உள்ளாவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, ஆங்கிலேயர் காலத்தில் கட்டளை மேட்டு வாய்க்காலில் கட்டப்பட்ட இந்தப் பழமையான மற்றும் குறுகலான வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்தி கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story