கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 6:37 PM GMT (Updated: 24 Feb 2021 11:06 AM GMT)

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 130 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி, 

 தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொருளாளர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் கார்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் அஞ்சலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 3 ஆயிரம் வழங்குவதுபோல், தமிழகத்திலும் குறைந்த பட்ச உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் இடங்களை  உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயன்றனர்.

கைது

 அப்போது  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் மாற்றுத்திறனாளிகள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். 

Next Story