இடைக்கால பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக உள்ளது கரூர் மாவட்ட மக்கள் கருத்து


இடைக்கால பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக உள்ளது கரூர் மாவட்ட மக்கள் கருத்து
x
தினத்தந்தி 24 Feb 2021 1:02 AM IST (Updated: 24 Feb 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

இடைக்கால பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக உள்ளது என கரூர் மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

கரூர்
வரவேற்கத்தக்கது
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து கரூர் மாவட்ட பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் சில வருமாறு:- 
வெள்ளியணை ஓந்தாம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜகோபால்:- தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பயிர் கடன் தள்ளுபடிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இயற்கை மரணத்திற்கு காப்பீடு அளிக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. வேளாண்மை துறைக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வெள்ளம், புயல், வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைபோல் விவசாயத் தேவைகளுக்காக பிற வங்கிகளில் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வேலை வாய்ப்பு வேண்டும்
வெள்ளியணை நத்தப்பட்டியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் த.பெரியசாமி:-
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பயன்படும் வகையில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டம் தொடரும் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பெயரில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு போல் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கல்லூரி இல்லாத இடங்களில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும். என்னைப் போன்று படித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
தொழில் முனைவோருக்கு பயன் இல்லை
கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ஸ்டிபன்பாபு:-
இது வெற்று பட்ஜெட்டாகவே உள்ளது. தொழில் முனைவோருக்கு பயனுள்ளதாக இல்லை. மக்களை கவருவதற்காகவும், ஓட்டு வங்கியினை அதிகப்படுத்துவதற்காகவும் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆகும். கடன் வாங்கி செய்யும் இந்த பட்ஜெட் சாதாரண மக்களை மேலும் கடனாளியாக்கும். 
மாநிலத்திற்கு நிதி கிடைக்க வேண்டும்
கரூர் காவிரி நீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராஜாராம்:-
கிராமப்புற மக்களுக்கு சாதகமான பட்ஜெட். துறைவாரியாக சென்ற ஆண்டை விட சிறிது ரூபாய் ஒதுக்கீடு உயர்த்தப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் பா.ஜ.க. இருந்தாலும், வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் 15-வது நிதிக்குழு அறிக்கையிலாவது மாநிலத்திற்கு நிதி கிடைக்க வேண்டும் போன்ற குறைகளை சுட்டி காட்டிய நிதி அமைச்சகத்தை பாராட்ட வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story