தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பெற்றுத்தந்த அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு - ஜான் பாண்டியன் பேட்டி


தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பெற்றுத்தந்த அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு - ஜான் பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2021 8:51 PM GMT (Updated: 23 Feb 2021 8:55 PM GMT)

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பெற்றுத்தந்த அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கூறினார்.

நெல்லை:
தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பெற்றுத்தந்த அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கூறினார்.

இதுதொடர்பாக அவர் நெல்லையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவேந்திரகுல வேளாளர்

தேவேந்திரகுல வேளாளர்கள் சமுதாயத்தில் உள்ள 7 பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட 40 ஆண்டு காலமாக வலியுறுத்தி வந்தோம். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய வரலாறு குறித்து பேசினார். இந்த சமுதாயம் குறித்து நாட்டு மக்களுக்கு அவர் தெரிவித்தார். நரேந்திரன், தேவேந்திரன் இரண்டும் ஒன்றுதான் என பெருமையாக பேசினார்.

இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கொண்டாடி வருகிறோம். இது சாதாரண விஷயம் அல்ல. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் 461 நாட்கள் கருஞ்சட்டை போராட்டம் நடத்தி வந்தோம். மேலும் அகிம்சை வழியிலும் போராட்டங்கள் நடத்தி வந்தோம். தற்போதைய அறிவிப்பு மூலம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதை நாங்கள் சுதந்திர தினமாகவே கருதுகிறோம். பட்டியல் பிரிவில் இருந்து வெளியேறுவது குறித்து அடுத்த கட்டமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நன்றி

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் வாக்களிப்பார்கள். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதவிர பலதரப்பட்ட சமுதாய தலைவர்களும் எங்களது கோரிக்கைக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசாணையை வென்றெடுக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். அவர்கள் அரசாணை கிடைக்க வழி வகுத்து தந்தனர்.

அ.தி.மு.க.-பா.ஜனதா   கூட்டணிக்கு ஆதரவு

அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.- பா ஜனதா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும். தேர்தல் அறிவித்த உடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு எடுக்கப்படும்.

வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி காஞ்சீபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். வருகிற 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஓட்டப்பிடாரம், தேனி, நிலக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் "அரசாணை கோரிக்கையும், சட்டமன்ற அரியணையும் வென்றோம் வெல்வோம்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சி தலைவர் ஜான் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட செயலாளர் நாகராஜன் வரவேற்றார். 

இதில் துணை பொது செயலாளர்கள் நெல்லையப்பன், இமான் சேகர், பொருளாளர் அய்யாத்துரை பாண்டியன், மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், மண்டல செயலாளர் பட்டாபிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் நன்றி கூறினார்.

Next Story