2 வீடுகளில் 11 பவுன் நகைகள் கொள்ளை


2 வீடுகளில் 11 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 24 Feb 2021 2:27 AM IST (Updated: 24 Feb 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

2 வீடுகளில் 11 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே தங்கராசுபட்டினம் நகரில் வசித்து வருபவர்
நவநீதபாலு (வயது 46). இவர் ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கணவர் செங்குட்டுவனை விட்டு பிரிந்து தனது இரு மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் 4 பேர் நவநீதபாலு வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்தவர்களை கத்தி, கட்டைகளை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் டி.வி. ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அவர்களை வீட்டிற்குள் வைத்து தாழ்ப்பாள் போட்டு விட்டு சென்று விட்டனர். நேற்று காலை அவர்களது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் தாழ்ப்பாளை திறந்து விட்டனர்.
இதேபோல் ரஞ்சன்குடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 50 மீட்டர்  காட்டுக்கொட்டகையில் வசித்து வருபவர் வீரபத்திரன் (55). இவர் வீட்டின் முன்புறம் உள்ள கொட்டகையில் கட்டிலில் படுத்திருந்தார். அப்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே, வீரபத்திரன் எழுந்து பார்த்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அவரை வீட்டின் முன்னால் அடுக்கி வைத்திருந்த ஆஸ்பெடாஸ் சீட்டின் முனையில் இடித்துத் தள்ளினர். இதில் அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.
பின்னர், அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீரபத்திரன் மனைவி லட்சுமியை மிரட்டி அவர் அணிந்திருந்த ½ பவுன் தோடு, ½ பவுன் மோதிரம், கொலுசு மற்றும் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம்   ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
 இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மங்களமேடு போலீசார் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 2 வீடுகளில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story