சரக்கு வேன் திருடி வந்த பலகார கடைக்காரர் கைது
தஞ்சையில் போலீசாரின் வாகன சோதனையின்போது சரக்கு வேன் திருடி வந்த பலகார கடைக்காரர் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். கொரோனாவால், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் போலீசாரின் வாகன சோதனையின்போது சரக்கு வேன் திருடி வந்த பலகார கடைக்காரர் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். கொரோனாவால், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
வாகன சோதனை
தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ், சப்-இன்ஸ்பெக்டர் டேவிட், ஏட்டு சிங்காரவடிவேல் மற்றும் போலீசார் கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தினர்.அதில் இருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அம்மாப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் செல்லதுரை(வயது 39) என்பது தெரிய வந்தது.
சரக்கு வேன் திருட்டு
சுரேஷ்செல்லதுரை ஓட்டி வந்த சரக்கு வேன், திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வேனை பறிமுதல் செய்து அதில் இருந்த சிலிண்டர் மற்றும் கட்டிங் பிளேயர் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
பலகார கடை
சுரேஷ் செல்லதுரையின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகும். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் திருமணம் செய்து இங்கேயே வேலை செய்து வந்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பு இவர் அரியலூரில் பலகார கடை திறந்து அதில் இனிப்பு, காரம் விற்று வந்தார். இதில் நல்ல வருமானம் கிடைத்தது. இதையடுத்து தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளிலும் கடை திறந்து விற்பனை செய்துள்ளார்.
தொழிலில் நஷ்டம்
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இவருக்கு தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு கடன்தொல்லை ஏற்பட்டது. மேலும் பலரிடம் கடன் வாங்கியதால் குடிப்பழக்கத்துக்கும் அடிமை ஆனார்.
இதனை சரி கட்டுவதற்காக அவர் திருட்டில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அதன்படி அம்மாப்பேட்டையில் ஒரு சரக்கு வேனை திருடினார். அதேபோல் வெல்டிங் கடையில் வெல்டிங் செய்வதற்கு தேவையான பொருட்களை திருடி உள்ளார்.
ரேஷன் கடைகளில் திருட்டு
அதைத்தொடர்ந்து அம்மாப்பேட்டை அருகே உள்ள கொக்கேரி, கொருக்குப்பேட்டை, தஞ்சை வடக்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் பூட்டை உடைத்து அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவற்றை திருடி அவற்றை சரக்கு வேனில் எடுத்துச்சென்று வெளி இடங்களில் விற்பனை செய்துள்ளார்.
அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு தான் வாங்கிய கடனை அடைத்து விட்டு மீண்டும் கடை நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி திருட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் அரசுக்கு சொந்தமான கடைகளில் கொள்ளையடித்தால் யாரும் புகார் கொடுக்க மாட்டர்கள் என நினைத்து அதில் ஈடுபட்டுள்ளார்.
சிறையில் அடைப்பு
மேலும் உரிய வேலை, போதிய வருமானம் இல்லாததாலும், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாலும் சுரேஷ் செல்லதுரையிடம் இருந்து அவருடைய மனைவி விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சுரேஷ் செல்லதுரையை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story