ரூ.1½ கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம்


ரூ.1½ கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம்
x
தினத்தந்தி 23 Feb 2021 9:02 PM GMT (Updated: 23 Feb 2021 9:02 PM GMT)

ரூ.1½ கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம்

பெரம்பலூர்
பெரம்பலூர்-எளம்பலூர் பிரதான சாலையில் பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கும் எளம்பலூர் ஊராட்சிக்கும் எல்லையாக இருப்பது உப்புஓடை ஆகும். இந்த ஓடையில் நகராட்சி நிர்வாகம் மூலம் 5 குடிநீர் கிணறுகள் தோண்டப்பட்டு பெரம்பலூர் நகருக்கு காவிரி குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்போது உப்புஓடை குடிநீர் ஈடு செய்யப்படுகிறது. உப்பு ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான கல்வெட்டு பாலம் குறுகலாகவும், வாகன பயன்பாட்டிற்கு வசதி குறைவாகவும் இருந்தது. ஆகவே, பழமையான பாலத்தை அகற்றி விட்டு புதிதாக பாலம் கட்டமுடிவு செய்யப்பட்டது. இதற்காக நெடுஞ்சாலைத்துறையின் ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 52 லட்சம் செலவில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. இந்த புதிய பாலத்தை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் உப்பு ஓடைபகுதியில் நடந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சாபுதீன், உதவி கோட்ட பொறியாளர் பாபுராமன், உதவி பொறியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, புதிய பாலத்தை வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர். மேலும், பெரம்பலூர்-துறையூர் இடையே தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின்கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதிஉதவியுடன் ரூ.196 கோடியே 37  லட்சம் மதிப்பில் 30 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாடு செய்து, குரும்பலூர், நக்கசேலம் ஆகிய இடங்களில் புறவழிச்சாலைகளுடன் இருவழித்தடங்களாக உயர்த்தும் திட்டப்பணியையும் முதல்-அமைச்சர் நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் புறவழிச்சாலையில் செஞ்சேரி அருகே இப்பணிக்காக நடைபெற்ற கால்கோள் நிகழ்ச்சியில் கோட்டப்பொறியாளர் சுந்தரி, உதவி கோட்டபொறியாளர் மணிமொழி, இளநிலை பொறியாளர் விஜயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story