மையங்கள் மூடுவதை கைவிடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 206 பேர் கைது


மையங்கள் மூடுவதை கைவிடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 206 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2021 10:11 PM GMT (Updated: 23 Feb 2021 10:11 PM GMT)

சத்துணவு மையங்களை மூடும் முடிவினை கைவிடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 206 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்துணவு மையங்களை மூடும் முடிவினை கைவிடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 206 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம்
சத்துணவு ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று ஈரோடு தாலுகா அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்கள் ஏராளமானவர்கள் கூடி போராட்டம் நடத்தினார்கள். பலரும் கருப்பு உடைகள் அணிந்து வந்திருந்தனர்.
கோரிக்கைகள்
போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கே.மஞ்சுளா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மாரிச்சாமி, பழனிச்சாமி, கோமதி, சுப்புலட்சுமி, செல்வி, கவுரி, சபானா ஆஸ்மி, சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். சத்துணவு மையங்களுக்கான அரசு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும்.
வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி முறையான ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கே.ராஜ்குமார், மாவட்ட தலைவர் கோ.தனுஷ்கோடி ஆகியோர் பேசினார்கள். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன் சாலை மறியல்போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
206 பேர் கைது
தொடர்ந்து கூடி இருந்த ஆண்-பெண் பணியாளர்கள் ஊர்வலமாக வந்து தாலுகா அலுவலகம் முன்பு கச்சேரி வீதியில் நடு ரோட்டில் உட்கார்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வன், ரவிக்குமார், பலமுருகன் ஆகியோர் விரைந்து சென்று சாலைமறியல் செய்ய அனுமதி கிடையாது என்றும், கலைந்து போகும்படியும் எச்சரித்தனர்.
போராட்டக்குழுவினர் தொடர்ந்து சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். 31 ஆண் பணியாளர்கள் உள்பட 206 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story