சேலம் மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை நாமக்கல்லை சேர்ந்தவர்
சேலம் மத்திய சிறையில் நாமக்கல்லை சேர்ந்த கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் நாமக்கல்லை சேர்ந்த கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்புலன்ஸ் டிரைவர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள செண்பகமாதேவி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 30). இவர் சேலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை அசோக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவியின் தாய் கடந்த ஆண்டு மே மாதம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அசோக்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அசோக்குமார் தனது அறையில் திடீரென்று லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறை வார்டன் ஒருவர் அசோக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சிறை போலீசார் அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜாமீன் கிடைக்கவில்லை
இந்த சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் அசோக்குமார் கைது செய்யப்பட்டதில் இருந்து அவர் பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.
மேலும் அவருக்கு தண்டனை கிடைத்து விடும் என்று மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தற்கொலை செய்திருக்கலாம். எனினும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர். கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் நேற்று சேலம் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story