தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி சேலத்தில் வேல்முருகன் பேட்டி


தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி சேலத்தில் வேல்முருகன் பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2021 4:21 AM IST (Updated: 24 Feb 2021 4:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்று சேலத்தில் வேல்முருகன் கூறினார்.

சேலம்:
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்று சேலத்தில் வேல்முருகன் கூறினார்.
வேல்முருகன் பேட்டி
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும், தமிழக மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற கேரிக்கையை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி சேலம் ஓமலூரில் மாநாடு நடக்கிறது. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோய்விட்டது. ரெயில்வே துறை உள்பட அனைத்து துறைகளில் உள்ள வேலைவாய்ப்பில் திட்டமிட்டே தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
தமிழக அரசு, உரிமையை காவு கொடுத்து வருகிறது. தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகம் உள்ளது. மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் அரசை, அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் பாரதீய ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. இது கண்டனத்துக்கு உரியது.
இடஒதுக்கீடு
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். தி.மு.க. கூட்டணி அரசு அமைய தமிழக மக்கள் முடிவு எடுக்க வேண்டும். தேர்தலை மனதில் வைத்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகிறார்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வன்னியர்களை ஏமாற்றி வருகின்றனர். வன்னியர்கள் மீது உண்மையான பற்று இருந்தால் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிட தயாரா?. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற முடியாத திட்டங்களை தேர்தல் நெருங்குவதால் அறிவித்து வருகிறார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story