சிவகிரி பகுதியில் பலத்த மழை: ஆற்றின் கரை உடைந்து நெற்பயிர்கள் நாசம்


சிவகிரி பகுதியில் பலத்த மழை: ஆற்றின் கரை உடைந்து நெற்பயிர்கள் நாசம்
x
தினத்தந்தி 23 Feb 2021 11:54 PM GMT (Updated: 23 Feb 2021 11:54 PM GMT)

சிவகிரி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஆற்றின் கரை உடைந்து நெற்பயிர்கள் நாசமானது.

சிவகிரி:

சிவகிரி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஆற்றின் கரை உடைந்து நெற்பயிர்கள் நாசமானது.

பலத்த மழை

தென்காசி மாவட்டம் சிவகிரி, ராயகிரி, விஸ்வநாதபேரி, உள்ளார், தளவாய்புரம், சொக்கநாதன்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன. 

சிவகிரி அருகே தேவிப்பட்டினத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பேச்சிலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மேற்கே அமைத்துள்ள செங்குளம் கண்மாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றின் கரையில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. 

நெற்பயிர்கள் நாசம்

இதனால் சண்முகவேல், கருப்பசாமி, காளிராஜ் ஆகிய விவசாயிகளுக்கு சொந்தமான 4½ ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. மேலும் காமராஜ் காலனியைச் சேர்ந்த முத்து என்பவரின் 1 ஏக்கர் வயல் பகுதியும், கணேசன் என்பவருக்கு சொந்தமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு சில விவசாயிகளின் வயல்களில் உள்ள வரப்புகள், கரைகளில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், தேவிபட்டினம் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ், உள்ளார்- தளவாய்புரம் பகுதி கிராம நிர்வாக அலுவலர் புதியராணி, உதவி வேளாண்மை அலுவலர் அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். 

நிவாரணம் கிடைக்க ஏற்பாடு

விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், உடைப்பு ஏற்பட்ட கரைப்பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் ஆனந்த் தெரிவித்தார்.  

சிவகிரி அருகே ராயகிரி பாகம்-2 பகுதியான ராஜசிங்கப்பேரி வயல் பகுதியில் பெய்த பலத்த மழையால் உள்ளார், தளவாய்புரத்தை சேர்ந்த கருப்பசாமி, வனராஜ், வேம்புலிங்கம், பூசைத்துரை ஆகிய விவசாயிகளின் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. 

Next Story