கோவில்பட்டி, கயத்தாறில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 130 பேர் கைது


கோவில்பட்டி, கயத்தாறில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 130 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2021 5:03 PM IST (Updated: 24 Feb 2021 5:03 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி, கயத்தாறில் சாலை மறியலில் ஈடுபட்ட 130 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி, கயத்தாறில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 130 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள்
தெலுங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களைப் போல மாற்று திறனாளி களுக்கு குறைந்தபட்சம் ரூ 3 ஆயிரம், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய குடியிருப்பு போராட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் நடத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று 2 வது நாளாக மாவட்ட துணை தலைவர் எஸ். எம். சர்க்கரை யப்பன் தலைமையில் ஒன்றிய தலைவர் எ. கண்ணன், ஒன்றிய செயலாளர்பி. முத்து மாலை, நகர தலைவர் ஜெ.அந்தோணி ராஜ், கிளை செயலாளர்கள் போத்திராஜ், குருநாதன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் 30 பெண்கள் உள்பட 80 பேர் குடியேறும் போராட்டம் நடத்தினார்கள்.
மறியல் போராட்டம்
நேற்று காலை 11.30 மணியளவில் புதுரோடு அண்ணா சிலை முன்பு மறியல் போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக் கதிரவன் உத்தரவின் பேரில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கைது செய்தது தாலுகா அலுவலக வளாகத்தில் அமரச் செய்தார்கள். 
இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கயத்தாறு
கயத்தாறில் மாற்றுத்திறனாளிகள் 50 பேர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலுக்கு மாற்றுத்திறனாளிகள் மாநில குழு உறுப்பினர் சாலமன்ராஜா தலைமையில் நடைபெற்றது.  
இந்த சாலை மறியலில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்ட குழு உறுப்பினர் கருப்பசாமி, ராமச்சந்திரன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கொண்டல்சாமி, சுப்பையா, கோமதி பாண்டியன், அய்யம்மாள் உள்பட  50 பேரை கைது கயத்தாறு போலீஸ்  இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் ஆகியோர் கைது செய்தனர்.

Next Story