காமராஜர் துறைமுக வளர்ச்சிக்கு சர்வதேச மாநாட்டில் ரூ.2 ஆயிரம் கோடியில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தம்


காமராஜர் துறைமுக வளர்ச்சிக்கு சர்வதேச மாநாட்டில் ரூ.2 ஆயிரம் கோடியில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 24 Feb 2021 6:31 PM IST (Updated: 24 Feb 2021 6:31 PM IST)
t-max-icont-min-icon

காமராஜர் துறைமுக வளர்ச்சிக்கு சர்வதேச மாநாட்டில் ரூ.2 ஆயிரம் கோடியில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தம் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல்.

சென்னை, 

கடல்சார் சர்வதேச மாநாட்டில் காமராஜர் துறைமுக வளர்ச்சிக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது.

கடல்சார் சர்வதேச மாநாடு

இதுகுறித்து எண்ணூர் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய கடல்சார் துறையை காட்சிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகவும் மற்றும் இத்துறையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தவும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வருகிற 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை இந்திய கடல்சார் சர்வதேச மாநாடு நடத்துகிறது.

இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், இந்திய மற்றும் சர்வதேச கடல்சார் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி, தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.

12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இதில் காமராஜர் துறைமுகம், வணிகத்தை எளிதாக்குதல், கடலோர கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு இணைப்பு, பன்முக மாதிரி தளவாடங்கள் மற்றும் மொத்த சரக்கு போக்குவரத்து திரவ சரக்குகளி்ல் கவனம் செலுத்துதல் ஆகிய தலைப்புகளின் அமர்வுகளை ஒருங்கிணைத்து நடத்துகிறது. அத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது.

துறைமுக வளர்ச்சியை பொருத்தவரையில் தற்போது 11 கப்பல் நிறுத்தும் இடங்கள் உள்ளன. அவற்றில் 8 இடங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 3 இடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர மேலும் 11 கப்பல் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளது. கடந்த 2019-2020-ம் ஆண்டு துறைமுகத்துக்கு ரூ.707 கோடி வருவாய் கிடைத்தது. தொடர்ந்த 2020-2021-ம் ஆண்டில் தற்போது வரை ரூ.550 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இது ரூ.650 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமராஜர் துறைமுகம் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களை தான் கையாண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story