விழுப்புரத்தில் 2-வது நாளாக- அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


விழுப்புரத்தில் 2-வது நாளாக- அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 10:39 PM IST (Updated: 24 Feb 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம், 

அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அங்கன்வாடி ஊழியர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இவர்களின் போராட்டம் இரவிலும் நீடித்தது. போராட்ட திடலிலேயே சாமியானா பந்தல் போட்டு அங்கேயே உணவு சாப்பிட்டு விடிய, விடிய போராட்டத்தை தொடர்ந்தனர்.

இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்று 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பிரேமா, பொருளாளர் ராமதிலகம், துணைத்தலைவர் பழனியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story