வாணியம்பாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்


வாணியம்பாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 11:05 PM IST (Updated: 24 Feb 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே பதுங்கியுள்ள சிறுத்தையை காட்டுப்பகுதிக்கு விரட்ட 2 வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி

சிறுத்தை நடமாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை அருகே பங்களாதோப்பு பாலாற்று படுகை ஓரம் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த மல்லிகா, சம்பூர்ணம் ஆகியோர் நேற்று முன்தினம் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுத்தையை நாய்கள் துரத்தி செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது சிறுத்தை புதருக்குள் மறைந்து கொண்டது. இதுகுறித்து பொதுமக்கள் ஆலங்காயம் வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

2 வனக்குழு அமைப்பு

அதன்பேரில் வனவர் செங்குட்டுவன் தலைமையில் வனத்துறையினர், துணைபோலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என தண்டோரா மூலம் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து மாவட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு ஆகியோர் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்து சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிந்து காட்டுக்குள் விரட்ட 2 வனக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 
வாணியம்பாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story