வ.உ.சிதம்பரனார் சிலை திறப்பு விழாவில் நாற்காலிகள் வீச்சு
போடியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற வ.உ.சிதம்பரனார் சிலை திறப்பு விழாவில் நாற்காலிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போடி:
வ.உ.சி. சிலை
தேனி மாவட்டம் போடி பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோருக்கு தாரை தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளித்து மேடைக்கு அழைத்து சென்றனர்.
மேடையில் ஒ.பன்னீர்செல்வம், ஏ.சி.சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். இதைத்தொடர்ந்து விழா தொடங்கி நடந்து கொண்டிருந்தது.
சிறிதுநேரத்தில் மேடையின் முன்பு இருந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் திடீரென கோஷங்களை எழுப்பினர்.
நாற்காலிகள் வீச்சு
தங்களது சமூக பெயரை, வேறு பிரிவினருக்கு வழங்கியதாக கூறி தமிழக அரசு மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காததால் மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போடி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், நாற்காலிகளை எடுத்து அவர்கள் வீசினர். இதைத்தொடர்ந்து போலீசார், அவர்களை குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் அவர்கள், அதே பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே விழா தொடர்ந்து நடந்தது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் வ.உ.சி. சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Related Tags :
Next Story