சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்


சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
x
தினத்தந்தி 24 Feb 2021 11:50 PM IST (Updated: 24 Feb 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருேக நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் காளைகள் முட்டியதில் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

வடமதுரை:

ஜல்லிக்கட்டு 
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் கதிர் நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 

இதற்காக அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டது. விழாவில் பெருமாள் கோவில் முன்பாக வாழைப்பழம் சூறையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து பெருமாள் கோவிலில் இருந்து கோவில் காளை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. பின்னர் வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. 

இதை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து 598 காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அனுமதி வழங்கினர். பின்னர் அந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 

29 பேர் படுகாயம்
மாடுகளை பிடிப்பதற்காக திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை திமிலை பிடித்து அடக்க முடியாமல் வீரர்கள் மல்லுக்கட்டினர். 

அவர்களை காளைகள் தூக்கி வீசின. சில காளைகள் வீரர்களை மிதித்து துவம்சம் செய்து சீறிப்பாய்ந்தன. களத்தில் காளைகளின் சீற்றத்தை பார்த்த வீரர்கள் பலர் அடக்க முடியாமல் காளைகளுக்கு முன்பாக படுத்து தப்பினர்.

சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் களத்தில் நின்று விட்டு, பின்னர் யாரிடம் பிடிபடாமல் ஓடின. வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். 

காளைகள் முட்டியதில் வீரர்கள்,  பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் என 29 பேர் படுகாயம் அடைந்தனர். 

படுகாயமடைந்த 29 பேருக்கும் மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதில் மதுரை மாவட்டம் கொண்டையம்பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (29), திண்டுக்கல் மாவட்டம் புகையிலைபட்டி ஆரோக்கியசாமி (27), கொசவபட்டி ஜான் பிரிட்டோ (22), லூர்துராஜ் (40), தாமரைப்பாடி ஆரோக்கியசாமி (42) உள்பட 12 பேர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

பரிசுகள்
விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, டேபிள், சைக்கிள், மின்விசிறி, குக்கர், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. வீரர்களிடம் பிடிபடாமல் தப்பிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

 ஜல்லிக்கட்டையொட்டி வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story