3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
நாகர்கோவிலில் சுட்டெரிக்கும் வெயிலில் அங்கன்வாடி ஊழியர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சுட்டெரிக்கும் வெயிலில் அங்கன்வாடி ஊழியர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்குதல் அவசியம். பணியாளர்களுக்கு பணிக்கொடை ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டமானது கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக நடைபெற்றது. இரவு நேரத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பே அங்கன்வாடி ஊழியர்கள் பலர் படுத்து தூங்கினர்.
சுட்டெரிக்கும் வெயில்
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சரஸ்வதி தலைமை தாங்கினார். தலைவர் விஜயலட்சுமி, துணை தலைவர் அமுதா, சரோஜினி, உழைக்கும் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பொதுவாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள பந்தல் அமைப்பது வழக்கம். ஆனால் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அங்கன்வாடி ஊழியர்கள் வெயிலில் இருந்து தப்பிக்க எந்த தற்காப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் குடை பிடித்தபடியும், சேலையால் தலையை மூடியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story