கொடைக்கானலில் ஒரே நேரத்தில் 9 ஜெட் விமானங்கள் அணிவகுப்பு


கொடைக்கானலில் ஒரே நேரத்தில் 9 ஜெட் விமானங்கள் அணிவகுப்பு
x
தினத்தந்தி 24 Feb 2021 11:56 PM IST (Updated: 24 Feb 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் ஒரே நேரத்தில் 9 ‘ஜெட்’ விமானங்கள் அணிவகுத்து பறந்தன. இதை மாடியில் இருந்து ஆச்சரியத்துடன் பார்த்த பெண் ஒருவர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

கொடைக்கானல்:

பறந்த ஜெட் விமானங்கள் 
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 ஜெட் விமானங்கள் அதிவேகத்துடன் தாழ்வாக பறந்து சென்றன. இந்த நிலையில் நேற்றும் பகல் நேரத்தில் 9 ஜெட் விமானங்கள் வரிசையாக அணிவகுத்து பறந்தன. 

அந்த விமானங்கள் பயங்கர சத்தத்துடன் தாழ்வாக பறந்தன. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர். 

பின்னர் அவர்கள் தங்கள் வீட்டின் மாடிகளுக்கு சென்று வானத்தில் ஒரே சீராக பறந்து சென்ற ‘ஜெட்’ விமானங்களை பார்த்து ரசித்தனர். அந்த விமானங்கள் கேரள மாநில வான் எல்லையை நோக்கி பறந்து சென்றன. 

தவறி விழுந்த பெண்
இந்த விமானங்களை நாயுடுபுரத்தை சேர்ந்த அமீனா பேகம் (வயது 38) என்பவர் வீட்டின் மாடியில் நின்றபடி பார்த்து கொண்டிருந்தார். அந்த மாடியில் தடுப்புச்சுவர் இல்லாமல் இருந்தது.  

அப்போது எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி உயர மாடியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். 

இதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story