கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயன்ற 13 மாற்றுத்திறனாளிகள் கைது


கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயன்ற 13 மாற்றுத்திறனாளிகள் கைது
x
தினத்தந்தி 25 Feb 2021 12:07 AM IST (Updated: 25 Feb 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 2-வது நாளாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயன்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 2-வது நாளாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயன்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை 2-வது கட்டமாக நேற்று முன்தினம் நடத்தினர். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வழங்கப்படுவது போல தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதிலும் கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016-ன்படி தனியார் துறைகளில் 5 சதவீத பணிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதே போல குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அரசு அலுவலகங்களில் குடியேறும் 2-ம் கட்ட போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதாவது அனைவரும் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயற்சி செய்தனர். ஆனால் அப்போது கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற மாற்றுத் திறனாளிகள் 43 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மீது நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
13 பேர் கைது 
இந்த நிலையில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நேற்று 2-வது நாளாக நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மனோகர ஜஸ்டஸ், ஜெரால்டு, ஆன்றோ லேன்சி, குமார், தங்ககுமார், ஸ்ரீமணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து அனைவரும் கோ‌‌ஷங்களை எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஏமாற்றம் அடைந்த மாற்றுத் திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கும் நிலை உருவானது. எனவே மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Next Story