கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
மன்னார்குடி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் நடைபெற்றது.
மன்னார்குடி;
மன்னார்குடி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் நடைபெற்றது.
திருமணம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரன்குளத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது56). இவர் தற்போது மன்னார்குடி வ.உ.சி. ரோடு ராஜாஜி நகரில் வசித்து வருகிறார். இவருடைய மகள் சரண்யாவுக்கும் சேரன்குளம் கிராமத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவன்- மனைவி இருவரும் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் கொரோனா விடுமுறை காரணமாக சேரன்குளம் கிராமத்துக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு வந்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இந்தநிலையில் சரண்யாவை அவரது கணவர் மன்னார்குடியில் உள்ள சரண்யாவின் பெற்றோர் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சரண்யாவுக்கு திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சரண்யா மரணம் குறித்து அவரது தந்தை மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். இதில் தனது மகள் சாவுக்கு காரணமான கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சாலை மறியல்
.இந்தநிலையில் சரண்யா மரணம் குறித்து புகார் அளிக்க அவரது உறவினர்கள் மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கூடினர். அப்போது உதவி கலெக்டர் அலுவலகத்தில் இல்லை. இதனால் சரண்யாவின் கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 3-ம் தெரு சாலை சந்திப்பில் அமர்ந்து சரண்யாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் சரண்யாவின் உறவினர்களி்டம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதற்கிடையே அலுவலகத்துக்கு வந்த உதவி கலெக்டர் அழகர்சாமியிடம் சரண்யாவின் உறவினர்கள் புகார் மனு அளித்தனர். திடீரென நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருமக்கோட்டை மார்க்கத்தில் நேற்று மதியம் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story