கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுறு எழுத்தர், டிரைவர் பணிக்கான நேர்முகத்தேர்வு திடீர் ஒத்தி வைப்பு


கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுறு எழுத்தர், டிரைவர் பணிக்கான நேர்முகத்தேர்வு திடீர் ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 25 Feb 2021 1:05 AM IST (Updated: 25 Feb 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய பதிவுறு எழுத்தர், டிரைவர் பணிக்கான நேர்முகத்தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருச்சி, 
கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய பதிவுறு எழுத்தர், டிரைவர் பணிக்கான நேர்முகத்தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நேர்முகத்தேர்வு

தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர் மற்றும் டிரைவர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கான நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு திருச்சியில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேற்று முதல் வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதி வரை நடப்பதாக, விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம்

முதல் நாளான நேற்று நேர்முகத்தேர்வுக்கு ஒரு பேட்ஜ் அழைக்கப்பட்டிருந்தனர். அதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அந்த அலுவலக வளாகத்தில் குவிந்தனர். 
அப்போது, அங்கிருந்த அதிகாரிகள், இன்று(நேற்று) முதல் நடைபெற இருந்த நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அப்போது விண்ணப்பதாரர்கள், பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து  பஸ் மற்றும் கார் பிடித்து நேர்முகத்தேர்வுக்கு வந்துள்ளோம். ஏன், நீங்கள் முன்கூட்டியே எங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் தரப்பில், தங்களுக்கே தாமதமாகத்தான், சென்னை கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினர்.

சுவரில் அறிவிப்பு ஒட்டினர்

அதைத்தொடர்ந்து திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மூலம் நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பை கட்டுமான நுழைவு வாயில் சுவரில் ஒட்டப்பட்டது. அதில், வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதி வரை நடைபெற இருந்த பதிவுறு எழுத்தர் மற்றும் டிரைவர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

காரைக்குடி, முசிறி ஆகிய இடங்களில் இருந்து வந்த ஜோதிகா, புனிதா ஆகியோர் கூறுகையில், ‘நேர்முகத்தேர்வுக்காக காலையிலேயே எழுந்து புறப்பட்டு வந்தோம். இங்கு வந்ததும் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தோம். முறையாக செல்போன் எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தால் எங்களுக்கு அலைச்சல் இல்லை’ என்றனர். இன்னும் சிலர் தங்களது செல்போனுக்கு இன்று பகல் (அதாவது நேற்று) 12.50 மணிக்கு ரத்து செய்யப்பட்ட தகவல் அனுப்பி இருக்கிறார்கள் என்று அந்த குறுந்தகவலை காண்பித்தனர்.

Next Story