மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா


மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 25 Feb 2021 2:56 AM IST (Updated: 25 Feb 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தினக்கூலியை உயர்த்தி தரக்கோரி காரைக்குடி அருகே மின்வாரிய அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

காரைக்குடி
மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தினக்கூலியை உயர்த்தி தரக்கோரி காரைக்குடி அருகே மின்வாரிய அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
தமிழக மின்வாரியத்தில் உள்ள களப்பணிகளில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மின்வாரிய ஊழியர்களிடம் இணைந்து பல்வேறு பணிகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்படும் நிலையில் மின்சீரமைப்பு பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில் இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க உத்தரவிடப்பட்டு இதுநாள் வரை முறையாக வழங்கவில்லை. இதுதவிர மின்வாரிய காலி பணியிடங்களின் போது இவர்களுக்கு வயதை கருத்தில் கொண்டு தேர்வு செய்யாமல் இருப்பதாக கூறி காரைக்குடி அருகே கானாடுகாத்தான் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் 10 பேர் நேற்று மின்வாரிய அலுவலகம் முன்பு தங்களது வேலைகளை புறக்கணித்து விட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தினக்கூலி 
இந்த போராட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்க திட்ட தலைவர் சோலை தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் சிவசேகரன், திட்ட பொருளாளர் காசிவிஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி, கருப்பையா, அண்ணாமலை, கார்த்திக், சோலை, கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். 
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கூறியதாவது:- தமிழக மின்வாரியத்தில் சுமார் 8 ஆயிரத்து 400 பேர் வரை ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் ஏற்படக்கூடிய அனைத்து பேரிடர் காலங்களிலும் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலின் போது மின் சீரமைப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்ததை பாராட்டிய தமிழக முதல்-அமைச்சர் இதற்காக பாராட்டு விழா நடத்தி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்கப்படும் என அறிவித்த நிலையில் இதுநாள் வரை அவை முறையாக வழங்கப்படவில்லை. 
கோரிக்கை 
மேலும் மின்வாரியத்தில் கேங்மேன் என்ற புதிய பணியிடம் அறிவிக்கப்பட்டு அதில் சுமார் 9163 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வின் போது ஒப்பந்த தொழிலாளர்கள் 50 சதவீதம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என உறுதியளித்த நிலையில் தற்போது வெறும் 20 சதவீத பேர் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 30 சதவீத பேரின் வயதை காரணம் காட்டி தேர்வு செய்யவில்லை. இதனால் இந்த வேலையை நம்பியிருந்த ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
எனவே தமிழக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தீர்வு கண்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380-ம், வரும் காலி பணியிட தேர்வுகளில் அதிக முக்கியத்துவம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஒப்பந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story