தலைவாசல் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலி ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்
தலைவாசல் அருகே, ஆடுமேய்க்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தான்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே, ஆடுமேய்க்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தான்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பள்ளி மாணவன்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி வசந்தி. இவர்களது மகன் அஜித் (வயது 10). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
அருண்குமாருக்கு சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் மாணவன் அஜித், அவனுடைய அக்காள் வர்ஷினி ஆகியோர் நேற்று மதியம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள விவசாயி முத்துக்கு சொந்தமான விவசாய கிணற்றில் அஜித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். இதை அறிந்த அவனுடைய அக்காள் வர்ஷினி சத்தம் போட்டாள்.
பலி
இதுபற்றி தகவல் அறிந்த மாணவனின் தந்தை அருண்குமார் தலைவாசல் போலீஸ் நிலையத்துக்கும், ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த அஜித்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த கிணறு சுமார் 60 அடி ஆழம் கொண்டது. கிணற்றில் அதிக அளவில் தண்ணீர் இருந்தது.
எனவே தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றி விட்டு அஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணியளவில் அஜித்தை மீட்டனர். அப்போது அவன் இறந்து போனது தெரியவந்தது. அவன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆடு மேய்க்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story