கொண்டலாம்பட்டி அருகே பரபரப்பு மாவுஅரைக்கும் எந்திரத்தில் தலை சிக்கி பெண் சாவு
கொண்டலாம்பட்டி அருகே மாவு அரைக்கும் எந்திரத்தில் தலை சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே மாவு அரைக்கும் எந்திரத்தில் தலை சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பி்ல் கூறப்பட்டதாவது:-
மாவு மில்லில் வேலை
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி வெள்ளாளபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 42). இவரது மனைவி அலமேலு (38). இருவரும் ஆண்டிப்பட்டி பனங்காடு சித்தர்கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கோல மாவு மில்லில் வேலை செய்து வந்தனர்.
சம்பவத்தன்று ரவியும், அலமேலுவும் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். கணவர் ரவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மனைவி அலமேலுவை மில்லில் வேலைசெய்யும்படி கூறிவிட்டு அவர் சின்னப்பம்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பரிதாப சாவு
அலமேலு மட்டும் கோல மாவு மில்லில் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எந்திரத்தின் பெல்டில் எதிர்பாராதவிதமாக அவரது தலைமுடி பட்டது. இதில் இழுத்து செல்லப்பட்டதில் அலமேலுவின் தலை எந்திரத்தில் சிக்கிக்கொண்டதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அலமேலுவை மீட்டு சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு அலமேலு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story