நங்கவள்ளி அருகே மகனை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தந்தை குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்


நங்கவள்ளி அருகே மகனை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தந்தை குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 25 Feb 2021 3:03 AM IST (Updated: 25 Feb 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளி அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கடப்பாரையால் தந்தை அடித்துக் கொன்றார்.

மேச்சேரி:
நங்கவள்ளி அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கடப்பாரையால் தந்தை அடித்துக் கொன்றார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
லாரி டிரைவர்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை ஊராட்சி குண்டு தாசன்வளவு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு வெங்கடாசலம் (வயது 35) உள்பட 2 மகன்கள் இருந்தனர். வெங்கடாசலம் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
வெங்கடாசலத்துக்கு நந்தினி என்ற மனைவியும், மோனிஷ் (12), வினோத் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். நந்தினி, வெங்கடாசலத்திடம் கோபித்துக்கொண்டு கொல்லப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்று விட்டார்.
தகராறு
வெங்கடாசலம் குடித்துவிட்டு தனது தந்தை பழனிசாமியிடம், மனைவி நந்தினியை சேர்த்து வைக்கக்கோரி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல நேற்று முன்தினம் இரவு அவர்் குடித்துவிட்டு வந்து தந்தை பழனிசாமியிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பழனிசாமி ஆத்திரம் அடைந்தார். தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்கிறானே என கோபத்தில் இருந்தார்.
கொலை
இந்தநிலையில் பழனிசாமி நேற்று மதியம் தாரமங்கலத்தில் உள்ள தேங்காய் கடைக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வெங்கடாசலம் தூங்கிக்கொண்டு இருந்தார். இதைப் பார்த்த பழனிசாமி தூங்கிக் கொண்டிருந்த மகன் வெங்கடாசலத்தை கடப்பாரையால் தாக்கினார். தலைமீது அடித்ததில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி போலீசார் வெங்கடாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story