28 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.145 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த ஒக்கூரில் கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்பதால் ஒவ்வொரு விவசாயிகளின் எண்ணங்களையும் நன்கு அறிந்து அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகிறார். விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளார். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களாக வழங்கப்பட்ட 28,233 விவசாயிகளுக்கு ரூ.145.41 கோடி அசல், வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நிலுவையின்மை சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜா, கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், கூட்டுறவு வங்கித் துணைப்பதிவாளர்கள் ராஜேந்திரன், மணிமேகலை, கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் பாலராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story