ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பாகும் அரசியல் களம்
ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்புக்கு உள்ளாகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்புக்கு உள்ளாகி வருகிறது.
அ.தி.மு.க. கோட்டை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம், பவானிசாகர் என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பவானிசாகர் தனி தொகுதியாக இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 தொகுதிகளிலும் கடந்த (2016-ம் ஆண்டு) தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மாற்றுக்கட்சிகளுக்கு இடமில்லாமல் ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க.வின் கோட்டையாக கடந்த தேர்தல் ஈரோடு மாவட்டத்தை மாற்றியது. ஆனால், நாடாளு மன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஈரோடு மாவட்டத்தில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி என 2 கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் வெற்றி பெற்றன. இந்தநிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
மனநிலை
மீண்டும் ஈரோடு மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக தொடர வைக்க அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்புகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் வரிந்து கட்டிக்கொண்டு பணியாற்ற காத்திருக்கிறார்கள்.
அதே நேரம், இந்த முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் ஆக்கியே தீர வேண்டும் என்ற மனநிலையில் தி.மு.க.வினர் பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். இந்த 2 பெரிய கட்சிகளின் கூட்டணி கட்சியினரும் இதே மனநிலையில் இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் தனியாக களத்தில் உள்ளன.
விருப்ப மனுக்கள்
இந்தநிலையில் தி.மு.க. சார்பில் சட்மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உடையவர்களிடம் இருந்து மனுக்கள் வாங்கும் பணி தொடங்கியதும், ஏராளமானவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு விருப்ப மனுக்கள் வழங்கி இருக்கிறார்கள். இதுபோல் அ.தி.மு.க.விலும் விருப்ப மனு வழங்குவதில் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தொகுதியையாவது தங்களுக்கு பெற்று அதில் வெற்றி பெற வேண்டும் என்று தீர்க்கமாக இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜனதா கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் இந்த முறை 8 தொகுதியிலும் அ.தி.மு.க. நேரடியாக வேட்பாளர்கள் நிறுத்துவது என்பது இயலாத காரியம். ஆனால், கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க.வின் செல்வாக்கில் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்கள்.
தலைவர்கள்
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈரோடு மாவட்டத்தில் தொகுதிகள் கேட்கும். இதுபோல் பவானிசாகர் தொகுதியில் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அவர்களும் கேட்க வாய்ப்பு உள்ளது. எனவே தி.மு.க.வும் 8 தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிடும் வாய்ப்பு இல்லை.
ஆனால், அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளின் நிர்வாகிகளும் 8 தொகுதிகளிலும் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார்கள். குறிப்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தி இருப்பதை போன்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தியின் சுற்றுப்பயணத்துக்கு பொதுமக்கள் கொடுத்த வரவேற்பு ஆகியவை தி.மு.க. வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வருத்தம்
அ.தி.மு.க.வாக இருந்தாலும், தி.மு.க.வாக இருந்தாலும் தொண்டர்களின் எண்ணம், தங்கள் தலைவர்களின் வெற்றிக்கு பாடுபடுவதாக இருக்கிறது. ஆனால், நிர்வாகிகள் தங்களுக்குள் நடத்தும் பதவிப்போட்டி, சீட்டுக்காக போடும் போட்டி ஆகியவை கட்சிக்குள்ளேயே பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், கட்சி நிர்வாகிகள் அப்படி பார்ப்பது இல்லை. கட்சிகளுக்கு உள்ளேயே கட்சியில் பொதுமக்களை கவரும் வகையில் வேலை செய்பவர்கள் யார்? கட்சிக்காக உழைப்பவர்கள் யார்? என்பதை பார்க்காமல் சாதி பார்க்கும் நிலை உள்ளதாக சில கட்சி நிர்வாகிகள் நேரடியாகவே வருத்தப்படுகிறார்கள்.
பரபரப்பு
பதவியில் இருப்பவர்கள் மீண்டும் வந்துவிடக்கூடாது என்று கட்சிக்கு உள்ளேயே பிரிவினை ஏற்படுத்தும் அதிகார போட்டிகளும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் அனைவரும் போட்டியிட தயார் நிலையில் இருக்கிறார்கள். அ.தி.மு.க.விலேயே புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏற்கனவே கட்சிக்காக உழைத்து சில ஆண்டுகள் வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்து வருகிறது.
தி.மு.க.வில், நீண்ட காலம் கட்சி பணியாற்றிய பலரும் இந்த தேர்தலில் சீட் வாங்குவதை முக்கியமாக கருதுகிறார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வருகை பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதும், தினசரி அனைத்து தரப்பு மக்களும் ஏதோ ஒரு காரணத்துக்காக போராட்டம் நடத்தி வருவதும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். புதிய வாக்காளர்களின் மனநிலை, அ.தி.மு.க.வும் வேண்டாம், தி.மு.க.வும் வேண்டாம், பா.ஜனதா வேண்டாம், காங்கிரசும் வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பதா? இல்லை மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளை தேர்ந்து எடுப்பதா? எனற மனநிலையிலும் உள்ளனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பு அடைந்து இருக்கிறது.
Related Tags :
Next Story