திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு உறுதி ஏற்பு - கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் பொன்னையா பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அதனை அரசு அலுவலர்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, நில அளவை உதவி இயக்குனர் ராமச்சந்திரன், கூடுதல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அமிதுல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லூறவு மைய கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் நலிவுற்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் திட்டமான நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் விதமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 52 பெண் குழந்தைகளுக்கு 4 மாதங்களுக்கு ஊக்கதொகை தலா ரூ.8 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
மேலும் பெண் குழந்தைகளுக்கான 24 மணி நேர இலவச மற்றும் அவசர உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட கலெக்டர் வெளியிட மாணவிகள் பெற்று கொண்டனர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அமைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் சிறு முழக்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகள் மற்றும் பாராட்டு் சான்றிதழ்களை வழங்கினார். அதை தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story