ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி விற்பனை பெண் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 8 பேர் கைது
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வீட்டில் பதுக்கி விற்றதாக பெண் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
மதுரவாயல் அருகே புளியம்பேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் துணை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.
அதில் அந்த வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி விற்பது தெரிந்தது. வீட்டில் பதுக்கி இருந்த 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த 8 பேரை கைது செய்து, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். கைதானவர்களிடம் மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நெற்குன்றத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான அந்த வீட்டை சிதம்பரத்தை சேர்ந்த அரி (வயது 28) என்பவர் 2 மாதங்களுக்கு முன்பு மாதம் ரூ.15 ஆயிரம் என பேசி வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டில் அவரது நண்பர்கள் டிராவல்ஸ் வைத்து நடத்த உள்ளதாகவும், அவர்களுடன் வேலை செய்யும் 4 பேர் தங்கி இருப்பார்கள் என்றும் கூறி உள்ளார்.
ஆனால் ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சாவை கடத்தி வந்து இந்த வீட்டில் பதுக்கி வைத்து, பின்னர் அவற்றை தனித்தனி பொட்டலங்களாக பிரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்து வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவர்கள், ஐ.டி.யில் பணிபுரிபவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
மேலும் விசாரணையில் கைதானவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெய்சூர்யா (24), சஞ்சய் (20), மதுரையை சேர்ந்த ஸ்ரீநாத் (21), சிதம்பரம் கடவாச்சேரியை சேர்ந்த 18 வயது சிறுவன், வண்டலூரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் பிரசாந்த் (19), திருவாரூரை சேர்ந்த சரத்குமார் (27), ஆவடியை சேர்ந்த கல்லூரி மாணவன் அருண் (20), தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவன் சேரன் (22) என்பதும், இவர்களில் அருண், ஆவடியில் உள்ள 5-வது பட்டாலியனில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான அரியை தேடி வருகின்றனர். இவர்தான், ஆந்திராவில் இருந்து மொத்தமாக இவர்களுக்கு கஞ்சா வாங்கி அனுப்பி வைப்பதும், பின்னர் இவர்கள் வீட்டில் பதுக்கி தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ததும் தெரிந்தது.
Related Tags :
Next Story