ஆவடி அருகே, பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ.வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). இவர், ஆவடியில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் 3½ சென்ட் இடத்துக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதன்பேரில் அவருக்கு பட்டா வந்தது. ஆவடியை அடுத்த பாலவேடு வி.ஏ.ஓ. துர்காதேவி ( 48) என்பவரிடம் சென்று தனது பட்டாவை தரும்படி கேட்டார்.
அப்போது பட்டாவை சதீஷ்குமாரிடம் காண்பித்த துர்காதேவி, தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அதை தருவதாக கூறினார். இவ்வாறு 3 மாதங்களாக சதீஷ்குமாரிடம் அவரது பட்டாவை கொடுக்காமல் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், இதுபற்றி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். பெண் வி.ஏ.ஓ.வை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை சதீஷ்குமாரிடம் கொடுத்து அதை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
அதன்படி நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. குமரகுரு தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலவேடு வி.ஏ.ஓ. அலுவலகத்தில் மறைந்து இருந்தனர்.
அப்போது சதீஷ்குமார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பெண் வி.ஏ.ஓ. துர்காதேவியிடம் கொடுத்தார். அதை அவர் கையில் வாங்கியதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று துர்காதேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story