குடியாத்தம் அருகே கார்மோதி 2 பெண்கள் பலி
குடியாத்தம் அருகே 100 நாள் வேலைக்கு சென்று திரும்பிய 2 பெண்கள் கார்மோதி பலியானார்கள்.
குடியாத்தம்
100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மனைவி வசந்தா (வயது 56). அதே கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி மனைவி பூஷணம்மாள் (60). இருவரும் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள்.
இவர்கள் இருவரும் சேங்குன்றம் ஊராட்சி தீர்த்தமலை செல்லும் வழியில் 100 நாள் வேலை திட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணியில் மற்ற தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்தனர்.
கார்மோதி 2 பெண்கள் பலி
நேற்று மதியம் வசந்தா, பூஷணம்மாள் இருவரும் வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சேங்குன்றம் அடுத்த எஸ்.மோட்டூர் கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக பலமநேர் நோக்கி வேகமாக சென்ற கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த வசந்தா, பூஷணம்மாள் ஆகிய இருவரையும் கிராம மக்கள் மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இருவர் மீதும் மோதிய கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த காரை கிராம மக்கள் விரட்டி சென்று மோர்தனா கூட்ரோடு பகுதியில் மடக்கிப்பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், ராமானுஜம், சிவகுமார் உள்ளிட்டோர் விரைந்து சென்று கார் மற்றும் அதன் டிரைவரை குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
டிரைவர் கைது
விசாரணையில் விபத்துக்குள்ளான கார் டிரைவர் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். அடுத்த வெங்கடசமுதிரம் பகுதியை சேர்ந்த மகேஷ் (26) என்பது தெரியவந்தது. குடியாத்தத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் டிரைவர் மகேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story